உத்தரப் பிரதேசம், வாரனாசியில், 28 வயது நிரம்பிய ரிஸ்வானா தபஸும் எனும் ஊடகவியலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஷமீம் நோமானி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷமீம் நோமானிதான் தன் சாவுக்குக் காரணம் என ரிஸ்வானா தற்கொலை குறிப்பை விட்டுச் சென்றுள்ள நிலையில், ஷமீம் கைது செய்யப்பட்டுள்ளார்,
இந்த வழக்கில் ஷமீம் முறையாகக் கைது செய்யப்பட்டு. திங்கட்கிழமை இரவு முதலே காவல் துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதாகவும், ரிஸ்வானாவின் உடற்கூறாய்வு அறிக்கை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷமிம் - ரிஸ்வானா இருவரும் நீண்ட காலம் நண்பர்களாக இருந்ததாகக் கூறப்படும் நிலையில், திடீரென்று நடந்த இந்தச் சம்பவம் உடன் இருப்பவர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை நீண்ட நேரமாகியும் ரிஸ்வானா தன் அறையை விட்டு வெளிவராததைத் தொடர்ந்து, காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, காவல்துறையினர் அங்கு சென்று கதவை உடைத்துத் திறந்தபோது, ரிஸ்வானா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து அவரது தந்தை, ரிஸ்வானா யாருடனும் பகையை வளர்த்துக் கொள்ளவில்லை. எனக்கு ஒரு நல்ல மகளாகவும், சமூகத்தில் நல்ல பத்திரிகையாளராகவுமே என்றைக்கும் இருந்தார் என தெரிவித்தார்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேஷன் படித்த அவர் பல பிரபல இணையதளங்கள், வெளியீடுகளுக்காக ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நமக்கு இப்போது 5ஜி தேவையா? பேராசிரியர் கோயல் விளக்கம்!