கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு ஊரடங்கினை அமல்படுத்தி மே மாதம் 25ஆம் தேதிவரை உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் விமான போக்குவரத்து சேவையை ரத்துசெய்திருந்தது.
இந்நிலையில், மே 25ஆம் தேதிமுதல் உள்நாட்டுப் பயணிகள் விமானங்கள் மூன்றிற்கு ஒன்று என்ற விகிதத்தில் இயக்கப்படும் என சில நாள்களுக்கு முன்பு அறிவித்தது. இதையடுத்து, பல்வேறு விமான நிறுவனங்களும் விமானங்களை இயக்க ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுவருகின்றன.
இது ஒருபுறமிருக்க வெளிநாட்டுப் பயணிகள் விமான சேவை எப்போது தொடங்கும் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுவருகின்றன.
இதற்குப் பதிலளித்த மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, "ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் மீண்டும் நல்ல விகிதங்களில் வெளிநாட்டுப் பயணிகள் விமான சேவை தொடங்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
ஆனால் எந்தத் தேதியிலிருந்து விமான சேவை தொடங்கப்படும் என அறுதியிட்டுக் கூற இயலாது. சூழ்நிலைகள் அனைத்தும் சாதகமாக இருந்தால் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னதாகவே விமான போக்குவரத்து தொடங்கப்படும். விமான சேவை தொடங்குவது தொடர்பான அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன" என்றார்.
இதையும் படிங்க: விமான சேவை தடைகளை நீக்கிய உள் துறை!