மகாராஷ்டிராவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் மகா கூட்டணி அமைத்த சிவசேனா ஆட்சி அமைத்தது.
அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான சவுகானுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரான அப்துல் சட்டார் தனது இணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அமைச்சர் பதவி கொடுப்பதாக வாக்குறுதி அளித்த நிலையில், இணையமைச்சர் பதவி கொடுத்து ஏமாற்றிவிட்டனர் என்றெல்லாம் தகவல்கள் பரவியது.
இந்தத் தகவலை அப்துல் சட்டார் மறுத்துள்ளார். சிவசேனா கட்சியின் தலைவரும் மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்கரேவை இன்று (ஜன. 5) சந்திக்கவிருப்பதாகவும், அதன்பின்னர் முக்கிய முடிவு பற்றி அறிவிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக சட்டார், சிவசேனாவின் கோத்காரை சந்தித்துப் பேசினார். உத்தவ் தாக்கரே, சட்டார் சந்திப்பு இன்று (ஜன. 5) நண்பகல் 12.30 மணிக்கு தாக்கரேவின் இல்லத்தில் நடக்கிறது.
அவுரங்காபாத் சில்லோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக அப்துல் சட்டார் கடந்தாண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சிவசேனா கட்சியில் இணைந்தவர் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் கவிழ்கிறது சிவசேனா ஆட்சி?