இந்தியா - சீனா எல்லை விவகாரம் குறித்து மத்திய அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பேசிய அவர், இந்தியா-சீனா எல்லையான லடாக்கில் உள்ள தற்போதைய சூழல் கவலை அளிப்பதாக உள்ளது. நாட்டின் பாதுகாப்பு குறித்த விவகாரங்களை அரசு தெரிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரான சரத் பவார், தற்போது பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக உள்ளார். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க குழுவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் நாட்டின் பாதுகாப்புத் துறை அம்சங்கள் குறித்த விரிவான விவாதங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தற்போதைய சூழலில் தேச பாதுகாப்பை உறுதி செய்து அதை மேம்படுத்துவது குறித்து பேசப்படும் என சரத் பவார் தெரிவித்தார்.
முன்னதாக, ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் லீயை சந்தித்து இரு நாட்டு பூசல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். மேலும், இரு நாடுகளும் பூசலை தவிர்த்து சுமுக சூழலை விரும்புவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தயாரான காங்கிரஸின் இடைத்தேர்தல் பட்டியல் - சூடு பிடிக்கும் ம.பி. தேர்தல் களம்?