சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என 2018 செப்டம்பர் 28ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதற்கு சபரிமலை பக்தர்கள், இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சபரிமலைக்கு வழிபடவந்த பெண்கள் தடுத்துநிறுத்தப்பட்டு திரும்பி அனுப்பப்பட்டனர். இதனிடையே, சமூக செயற்பாட்டாளரான திருப்தி தேசாய் சபரிமலை கோயிலுக்குள் நுழைய முயன்றார். பின்னர் பாதி வழியிலேயே தடுத்துநிறுத்தப்பட்டு திரும்பி அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படுவதையொட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய திருப்தி தேசாய், "வரும் நவம்பர் 20ஆம் தேதிக்குப் பிறகு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வேன். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கேரள அரசிடம் வேண்டுகோள் விடுப்போம். பாதுகாப்பு இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி சபரிமலைக்கு சென்று வழிபடுவேன்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய கேரள தேவசம் வாரியத் துறை அமைச்சர் கே. சுரேந்தர், "சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு வழங்காது.
திருப்தி தேசாய் போன்ற சமூக செயற்பாட்டாளர்கள் சபரிமலை கோயிலுக்கு வரக் கூடாது. ஏனென்றால் இது வழிபடுவதற்கான இடம்; பெண்கள் தங்களது வலிமையை வெளிப்படுத்துவதற்கான இடம் அல்ல. ஒருவேளை அவருக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் அவர் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பெற வேண்டும்" எனத் தெரிவித்தார்.
சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்றம் அமர்வு, 2018இல் வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்ய மறுத்து, விசாரணையை ஏழு பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதையும் வசிங்க : கேரள முதலமைச்சருக்கு மாவோயிஸ்ட்டுகள் கொலை மிரட்டல்!