இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஐயத்திற்குரிய மரணம் தொடர்பான வழக்கில் முக்கியப் பங்காற்றிய பிகார் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே விருப்ப ஓய்வு பெற முடிவெடுத்தார். அவரது இந்த திடீர் முடிவை ஏற்ற பிகார் அரசு, அதற்கு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.
டிஜிபி பதவியில் இருந்து விலகிய பாண்டே, என்.டி.ஏ கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக ஊடகங்களை சந்தித்துப் பேசிய குப்தேஷ்வர் பாண்டே, "சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கும் எனது வி.ஆர்.எஸ்ஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் பிறந்து, வளர்ந்த எனது சொந்த மாவட்டமான பக்ஸர் மக்களால் எடுக்கப்படும் முடிவே என் இறுதி முடிவாக இருக்கும். அவர்கள் என்னை விரும்பினால், நான் அரசியலில் நுழையலாம்.
பெகுசராய், சீதாமாரி, ஷாப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து என்னை வந்து சந்தித்த மக்கள், நான் அரசியலில் களம் காண வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று என்னிடம் கோரினர்.
எனது குடும்பம் விவசாயம் மற்றும் கால்நடைகளை வளர்ப்பதை பாரம்பரியமாக கொண்டது, எளிய வேளாண் பின்னணி கொண்ட குடும்பம். எளிய குடும்பத்தைச் சேர்ந்த என்னை மக்கள் ஏற்கிறார்கள். அரசியல்வாதிகள் என்னை கண்டு அஞ்சுகிறார்கள்" என்றார்.
பிகார் மாநிலத்தில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் அக்டோர்-நவம்பர் நடைபெறவுள்ளது.
தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிற சூழலில் கரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு காரணமாக பிகாரில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.