சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவிற்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், முதலமைச்சரான நிலையில் இதுவரை டெல்லி செல்லாதது ஏன் என்பது குறித்து பகிர்ந்துள்ளார். அதில் உத்தவ் தாக்கரே, “நான் நிச்சயம் டெல்லி செல்வேன். இதில் எந்த பிரச்னையும் இல்லை. இதுவரை டெல்லி செல்வதற்கான எந்த தேவையும் ஏற்படவில்லை என்பதால், நான் அங்கு செல்லவில்லை. தேவை ஏற்படும்போது நிச்சயம் டெல்லி செல்வேன். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்டோரை சந்திப்பேன்” எனப் பதிலளித்துள்ளார்.
உத்தவ் தாக்கரே முதலமைச்சரான பின்பு, பிரதமர் நரேந்திர மோடி - தாக்கரே சந்திப்பு புனேயில் கடந்தாண்டு டிசம்பரில் நடந்தது. காவல் துறை பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ள வருகைபுரிந்த மோடியை, முதலமைச்சர் தாக்கரே நேரில் சென்று வரவேற்றார். அதன் பின்னர் இதுவரை மரியாதை நிமித்தமாகக் கூட பிரதமரை தாக்கரே சந்திக்கவில்லை.
இதையும் படிங்க: மைதில் மொழி பேசும் அகதிகளிடம் பாஜக வாக்கு சேகரிப்பு