கடந்த சில தினங்களுக்கு முன் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜோசி பாபா வனப்பகுதியில் 15 குரங்குகள் கடும் வெப்ப தாக்குதலால் இறந்தன. இந்த 15 குரங்குகளும் உயிரிழக்க முக்கியக் காரணம், குடிக்க நீர் இல்லாதது. தண்ணீர் பஞ்சம் எந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கப் போகிறது என்பதற்கு இந்தக் குரங்குகள் இறந்ததன் பின்னணியை பார்க்க வேண்டும்.
ஜோசி பாபா வனப்பகுதியில் இறந்த குரங்குகள் நீர் அருந்துவதற்கான நீர்நிலை மிக அருகிலேயே இருந்துள்ளது. ஆனால், அங்கு வேறு ஒரு குரங்குக் கூட்டம் இந்தக் குரங்குகளை நீர் அருந்தவிடாமல் தடுத்திருக்கிறது. இந்த நிலை மனிதனுக்கு நேரும் காலம் வெகு தொலைவில் இல்லை.
தமிழ்நாட்டிலும் இதுபோல் வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன. இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் வனங்கள் எல்லாம் வாடிக்கிடக்கின்றன. குற்றாலம் மலைப்பகுதியில் ஆய்வுக்குச் சென்ற வனத் துறையினர், அங்கு உயிரிழந்த நிலையில் ஒரு கரடி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். கரடியை உடற்கூறாய்வு செய்ததில், அது பசியால் இறந்திருப்பது தெரியவந்துள்ளது.
தண்ணீருக்காக நாமும், பிற உயிரினங்களும் அடித்துக்கொண்டு சாகும் முன்பு நீர்வளத்தைப் பாதுகாக்க ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற முயற்சிகளை செய்யவேண்டும்.