'நினைத்தால் இணையம்', 'நொடியில் தரவிறக்கம்' என அதிவேகத்தில் மக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். மத்திய அரசும் 'டிஜிட்டல் இந்தியா' என்ற திட்டத்தின் மூலம் பல்வேறு இடங்களில் இலவச வைஃபை வசதி அளித்து மக்களை டிஜிட்டலாக மேம்படுத்திவருகின்றது.
அந்த வகையில், மத்திய அரசின் 'டிஜி காவ்ன்' (Digi Gaon) திட்டத்தின் மூலம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கெஸ் (Ghes) என்ற சிறிய மலை கிராமத்தில் இணைய சேவை வசதிக்காக வைஃபை பொருத்தப்பட்டது. மக்கள் தங்கள் வாழ்வில் கடினம் என்று நினைத்த பல்வேறு விஷயங்களை இலவச வைஃபை எளிதாக்கியது. ஆனால், அந்த மகிழ்ச்சியும் அப்பகுதி மக்களுக்கு நிரந்தரமானதாக இல்லை.
சில நாள்களிலே வைஃபை சேவை இணைப்பு கிடைப்பது தடையானது. ஆனால், மக்களைச் சந்திக்க அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் வருகைதரும் நேரம் மட்டும் இணைய வசதி மடைதிறந்தவுடன் சீறிப்பாயும் தண்ணீர் வேகத்தில் இணைப்புக் கிடைக்கிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "அரசு ஊழியர்கள் வரும்போது மட்டும் இணைப்புக் கிடைக்கும் இணைய சேவையை வைத்து என்ன செய்வது? இதனால், நாங்கள் தினமும் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் நடந்துதான் இணைய சேவையை பெற முடிகிறது. மத்திய அரசும், அலுவலர்களும் விரைவாக இந்தப் பிரச்னையை சரிசெய்ய வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்தனர்.
நமது ஈடிவி பாரத் செய்தி ஊடகம் அப்பகுதியில் வைஃபை சேவைக்கு முயற்சித்தபோதும் இணைப்புக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகவுள்ள ரியல்மி!