தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக மத்திய அரசும், உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் முறையான விளக்கமளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஐந்து நாள்களாகத் தொடர் அமளியில் ஈடுபட்டுவருகின்றன. தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை வரும் 11ஆம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருச்சி சிவா நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம், "டெல்லி கலவரம், உயிரிழப்பு தொடர்பாக விவாதிக்க வேண்டுமென்று ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம். ஆனால், அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. மனித உயிர்களுக்கு எந்த அளவுக்கு இந்த நாட்டில் மதிப்பு உள்ளது என்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ளலாம்.
டெல்லியில் இன்னமும் பதற்றமான சூழலே உள்ளது. ஆனால், மத்திய அரசு கலவரம் குறித்து பதிலளிக்க மறுக்கிறது. இது தொடர்பாகக் கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுகின்றனர்.
நாடாளுமன்றம் எதற்குப் போலியான சட்டங்களை இயற்றமட்டும் தானா? எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும்போது அதனை புறக்கணிக்க வேண்டும் என்று செயல்படுவது நமது நாடும் ஜனநாயகமும் எந்தப் போக்கில் செல்கிறது என்பதையே காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெண் சிசுக்கொலை! ஸ்டாலின் வேதனை!