ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, மத்திய வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் முன்பிணைக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஆகஸ்ட் 20ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து சிதம்பரத்தை சிபிஐ ஆகஸ்ட் 21ஆம் தேதி அதிரடியாக கைது செய்தது. பின்னர், கடந்த 15 நாட்களாக தொடர்ந்து காவலில் வைத்து விசாரணை செய்துவருகிறது.
சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரித்த சிபிஐக்கு வழங்கிருந்த காலம் இன்றோடு நிறைவடைந்தயடுத்து, அவரை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்தியது.
இதையடுத்து, ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளிக்குமாறு சிபிஐ மனு அளித்தது. இந்த மனுமீதான விசாரணையின் போது சிதம்பரம் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், "ப.சிதம்பரத்தை ஏற்கனவே 15 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரணை செய்தார்கள். இதுவரையில் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ எந்தவொரு ஆதாரங்களையோ, சாட்சிகளையோ கண்டறியவில்லை. இதுதொடர்பாக ப.சிதம்பரம் அமலாக்கத் துறையிடம் சரணடைவும் தயார் என்று கூறியிருக்கிறார். அதேபோல், ப.சிதம்பரம் எதற்கும் தயார் நிலையில் இருக்கும் பட்சத்தில் ஏன் திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும்" என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், சிபிஐயின் மனுவை ஏற்று, அவரை வரும் செப்டம்பர் 19ஆம் தேதி வரை, நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவர் திகார் சிறையில் சிறை எண் - 7 ல் அடைக்கப்பட்டார்.