மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் தொடங்கிய பாஜக-சிவசேனா போர், தற்போதுவரை நீடித்துவருகிறது.
இந்நிலையில், வீர சாவர்க்கரைப் புகழ்ந்து பேசிவரும் சிவசேனா, காங்கிரஸ் கட்சியினர் அவரை இகழ்வாகப் பேசுவது குறித்து ஏன் பதில் தெரிவிக்க மறுக்கிறது என்றும் சிவசேனா காங்கிரசைக் கண்டு அஞ்சுகிறதா என்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் ராம் கேதம் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த தாக்கரே, "வீர சாவர்க்கர் பின்பற்றிய இந்துத்துவத்திற்கும் சிவசேனா பின்பற்றும் இந்துத்துவத்திற்கும் வேறுபாடு உள்ளதாகப் பலரும் கருதுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை இந்துத்துவா என்பது கோயில் மணிகளையும் பாத்திரங்களையும் கொண்டது. எங்களுக்கு இந்துத்துவா என்பது வேறு" என்றார்.
இச்சூழலில் வீர சாவர்க்கர் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், "சிவசேனா என்றும் வீர சாவர்க்கர் குறித்த நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காது. அவருக்கு எதிரான கருத்துகளை யார் முன்வைத்தாலும் அவர்களை எதிர்த்து சிவசேனா நிற்கும். சிவசேனா எப்போதும் வீர சாவர்க்கருடன் உணர்ச்சிப்பூர்வமான பந்தத்தைக் கொண்டிருக்கும்.
சாவர்க்கர் குறித்து கருத்து தெரிவிக்கும் பாஜக, தன்னுடைய ஆட்சியில் பலருக்கு பாரத ரத்னா விருதை அறிவித்துவரும் நிலையில், வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா அறிவிக்காதது ஏன்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.