டெல்லி: ஆயுர்வேத தினமான இன்று (நவ.13) பிரதமர் நரேந்திர மோடி குஜராத்திலுள்ள ஜாம்நகரிலும், ராஜஸ்தானிலுள்ள ஜெய்ப்பூரிலும் காணொலி காட்சி மூலம் தேசிய ஆயுர்வேத நிறுவனத்தை தொடங்கிவைத்தார்.
பின்னர் பேசிய அவர், " உலக சுகாதார நிறுவனம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை வலுப்படுத்த உலக சுகாதார அமைப்பின் உலக மையங்களை நிறுவ உள்ளது.
நாட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆயுர்வேத நிறுவனங்கள் குஜராத் மற்றும் ராஜஸ்தான் இளைஞர்களுக்கு சிறப்பாக அமையும். இந்த பாரம்பரிய சுகாதார மையங்களால் ஜாம்நகரும், ஜெய்ப்பூரும் தேசிய முக்கியத்துவத்தைப் பெறும்.
இன்று தொடங்கப்பட்ட ஆயுர்வேத மையங்களில் ஆயுர்வேதம் குறித்தும் ஆய்வுகள் குறித்தும் பயிற்றுவிக்கப்படும்.
ஆயுர்வேதம் என்பது இந்தியாவின் மரபு. இந்தியாவின் ஒவ்வொரு நபரும் இந்த பழங்கால மருத்துவ முறை மீட்கப்படுவதால் மகிழ்ச்சியடைவர். அதுமட்டுமின்றி இந்த மரபுகள் நாட்டை செழுமையடைய வைக்கின்றன. பிரேசிலின் தேசிய கொள்கைகளிலேயே ஆயுர்வேதம் இணைக்கப்பட்டுள்ளது நமக்கு பெருமையளிக்கிறது.
இந்தியா உலகின் மருந்தகமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இது உலகளாவிய மக்களின் ஆரோக்கியத்தை சீராக்க உதவும். இங்கு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் அதிக வளர்ச்சியை கொண்டு செல்லும்" என்றார்.
கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 13ஆம் தேதி தன்வந்திரி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க: 'கரோனா பரிசோதனையில் ஆயர்வேத ஆராய்ச்சியாளர்கள்' அமெரிக்காவுடன் இணைந்த இந்தியா!