மத்தியப் பிரதேசத்தில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், “மாநிலத்தில் எதிர்க்கட்சி (பாஜக), ஆளுங்கட்சிக்கு (காங்கிரஸ்) எதிராக குதிரை பேரத்தில் ஈடுபட்டு எம்எல்ஏக்களை வேட்டையாடி வருகிறது.
கர்நாடகாவில் சமீபத்தில் இவ்வாறு நடந்ததை நாம் கண்டோம். அங்கு பாஜக இந்த வகையான குதிரை வர்த்தகத்தில் ஈடுபட்டது. தற்போது அதே அரசியல் மத்தியப் பிரதேசத்தில் நடப்பதைக் காண்கிறோம். இதற்கு காரணங்கள் எதுவாக இருந்தாலும், இது முழுக்க முழுக்க ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்.
அரசில் எம்எல்ஏக்கள் இடையே பகுதியாகவோ, பிரிவாகவோ அதிருப்தி காணப்படும். ஆனால் இதனைக் காரணியாக வைத்து மக்களின் ஆணையை, மாற்றியமைப்பது வெட்கக்கேடானது.
இதனை நாங்கள் முழுமையாகக் கண்டிக்கிறோம். இதேபோல் எம்எல்ஏக்கள் ஒரு கட்சியிலிருந்து மறுகட்சிக்கு தாவுவதும் மிகவும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றார். மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது.
இந்நிலையில் மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருடன் ஆறு அமைச்சர்கள் உள்பட 22 எம்எல்ஏக்களும் பதவி விலகினர். இதனால் கமல்நாத் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புமா காங்கிரஸ் அரசு!