கரோனா குறித்து இதுவரை நமக்குத் தெரிந்தது
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. சார்ஸ் வைரஸ் வகையைச் சேர்ந்த இதற்கு கோவிட்-19 எனப் பெயரிடப்பட்டுள்ளது. 'கரோனா வைரஸ் ட்சீஸ் 2019' என்பதன் சுருக்கமே 'கோவிட்-19'
இந்த நோயால் பாதிக்கப்படும் பெரும்பாலானோருக்கு சளி, வறட்டு இருமல், காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் நோய் வந்து மறைந்துவிடுகிறது. நோயின் தீவிரம் அதிகரிக்கும் பட்சத்தில் மூச்சுத் திணறல் அல்லது நிமோனியா வருவதற்கும் வாய்ப்புள்ளது.
ஆனால், இபோலா போன்ற மற்ற உயிர்க்கொல்லி நோய்களைப் போல உயிரிழப்பு அதிகம் ஏற்படுவதில்லை. பெரும்பாலும் முதியவர்கள், நீரிழிவு நோய், மூச்சுக் கோளாறு, இருதய பிரச்னை, புற்றுநோய் போன்ற நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களே கரோனாவால் அதிகம் உயிரிழக்கின்றனர்.
கோவிட்-19 எப்படி பரவுகிறது?
பொதுவாக எச்சில், சளி போன்ற திரவங்கள் வழியாகவே இந்த நோய்ப் பரவுகிறது. கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர் இரும்பும் போதோ, தும்பும் போதோ இந்த நோய் காற்றில் கலந்து அருகில் உள்ளவர்களின் கண், வாய், மூக்கு வழியாகத் தொற்றிக்கொள்கிறது .
கோவிட்-19 நோய் ஒரு இடத்தில் பலமணி நேரம் உயிருடன் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கிருமிநாசினியை அவ்விடத்தில் தெளிப்பதன் மூலம் நோய் அழிந்துவிடும்.
மறைந்திருந்து தாக்கும் கரோனா
ஒருவர் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டால், நோய் அறிகுறி தெரிவதற்கு குறைந்தது 2 அல்லது 14 நாட்கள் வரை ஆகும். இந்த இடைப்பட்ட காலத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர் மற்றவர்களுக்குப் பரப்பவும் வாய்ப்புள்ளது.
எனவே வெளியில் செல்லும்போது மூக்கு, வாய், கண் ஆகியவற்றைத் தொடுவதைத் தவிர்த்தல் நல்லது. வெளியில் சென்று வீட்டுக்கு வந்தவுடன் கைகளைச் சோப்பு போட்டு சுமார் 20 நொடிகள் கழுவுவது கட்டாயம்.
பிற நாடுகள் நமக்கு கற்றுக்கொடுத்தவை
ஏழை, பணக்காரன் என வித்தியாசம் பார்க்காமல் தாக்கும் கரோனா அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகளையும் திணறடித்து வருகிறது.
குறிப்பாக சுகாதாரத் துறையில் சிறந்து விளங்கும் இத்தாலியில் கோவிட்-19 கொடூரமாகத் தாக்கிவருகிறது. இந்நோயின் பிடியில் லட்சக்கணக்கானோர் சிக்கியுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பரிசோதனை அதிகம் மேற்கொண்ட மாகாணங்களில் நோய் பாதிப்பும், உயிரிழப்பும் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வரத் தேவையில்லை என்றும், பாதிப்பு தீவிரமாக உள்ளவர்கள் மட்டும் வந்தால் போதுமென அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, முழுவீச்சில் துரித பரிசோதனை மேற்கொண்ட தென் கொரியாவில் கரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் நபர்களை சோதனையிட்டு அதன் முடிவுகள் 6 மணி நேரத்தில் வெளியிட்டது தென் கொரோனா.
இந்தியா கற்றுக்கொண்டது இதுதான்...
130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது சரிவர செயல்படுத்தப்படவில்லை என்பதே நிதர்சனம்.
நகரங்களில் வேலைசெய்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்து வசதியின்றி பல கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்ற அவலமும் அரங்கேறியது. இப்படி சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்கள் அவ்விடங்களுக்கு கரோனாவைப் பரப்பிவிடுவர் என்ற அச்சம் மக்கள் மனதில் நிழலாடுகிறது.
போதிய அளவில் மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு கருவிகள் இன்றி மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் அபாயகரமான சூழலில் வேலைசெய்து வருகின்றனர். அதற்கு இதுபோன்ற பெருந்தொற்றுக்களை எதிர்கொள்ள சுகாதாரத் துறையில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும். முகக் கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அதிகம் வைப்பு வைத்திருக்க வேண்டும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்து 2 சதவீதமாவது சுகாதாரத் துறைக்கு அரசு ஒதுக்க வேண்டும். பணம் இல்லாமல் தவிக்கும் தொழிலாளர்கள், ஏழைகளுக்கு உணவும், தங்க இருப்பிடமும் அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.