போர்வெல் மரணங்கள் என்பது இந்தியாவில் தடுக்க முடியாத ஒன்றாக உள்ளது. அண்மையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மரணமடைந்தது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது.
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி என இந்திய அளவில் தலைவர்கள் சுஜித்தின் மீட்பு நடவடிக்கைகளை உற்றுநோக்கினர். ஆனால், மிகவும் தீவினையாக சிறுவன் சுஜித்தின் உடல் மட்டுமே மீட்கப்பட்டது.
இந்தச் சூழலில் போர்வெல் மரணங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர். ஷா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், போர்வெல் மரணத்தைத் தடுக்க அரசு எத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றிவருகிறது என்பது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ். மணி இது குறித்து கூறியதாவது:
எனது மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர். ஷா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆழ்துளைக் கிணறு விபத்து, உயிரிழப்பு சம்பவங்களைத் தடுக்க உச்ச நீதிமன்றம் 2010ஆம் ஆண்டு 16 விதிமுறைகளை வகுத்து தந்தது. ஆயினும் ஆழ்துளைக் கிணறு விபத்துக்கள், மரணங்கள் நிகழ்ந்ததை மத்திய அரசின் புள்ளி விவரங்கள் உறுதிசெய்கின்றன என்றும் வாதிட்டேன்.
இதைக்கேட்ட நீதிபதிகள், மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு நோட்டீஸ் ஒன்றை பிறப்பித்தனர். அதில், ஆழ்துளைக் கிணற்று விபத்து, உயிரிழப்புகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சம்பந்தமான அறிக்கையை தாக்கல்செய்ய வேண்டும் என்று உச்ச நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், பேரிடர் மீட்புக் குழு உள்ளிட்டவை நான்கு வாரத்தில் பதிலளிக்குமாறு கூறி வழக்கை நான்கு வார காலத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை