இந்தியாவில் கோவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக தொழில்துறை முற்றிலும் முடங்கி, பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இதனால் உத்தரப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்கள் தொழிலாளர் நலச் சட்டங்களில் சில திருத்தங்களை மேற்கொண்டன. இந்த சட்டத் திருத்தங்களுக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இது குறித்து புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "பாஜக ஆளும் மாநிலங்களில் தொழிலாளர் நலச்சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்துக் கேள்விப்பட்டோம்.
தொழிலாளர்கள் அதிகம் உழைக்க வேண்டும், ஆனால் அவர்களுக்குக் குறைவான ஊதியமே வழங்கப்படும். அதே சமயம் அவர்களின் வேலைகளுக்கும் எவ்வித உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. நாங்கள் இதை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்.
இதுபோல சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளவும் மாட்டோம். இப்போதுள்ள தொழிலாளர் நலச் சட்டமே மாநிலத்தில் தொடரும். வெளிமாநிலங்களிலிருந்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மாநிலத்திலேயே பணி வழங்கப்படும்" என்றார்.
தொடர்ந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்துப் பேசிய அவர், "மேற்கு வங்க பொருளாதாரம் இங்குள்ள கிராம பொருளாதாரத்தை நம்பியே இருக்கிறது. எனவே நாம் அதை முதலில் மீட்டெடுக்க வேண்டும். வரும் காலத்தில் இந்தியாவின் செயல் திட்டமாகவும் இதுதான் இருக்கும்" என்றார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு காலத்தில் திட்டமிட்டு மத ரீதியான மோதல்களைத் தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: 'மீதமுள்ள 16.4 லட்சம் கோடி எங்கே?' - ப.சி. கேள்வி!