இந்தியாவில் கரோனா பெருந்தொற்று பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்துவருகிறது. நேற்று (ஜூன் 15) மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
நாடு முழுவதும் இதுவரை 3.43 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 900ஆக அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், வரும் புதன்கிழமை மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னர் பிரதமர் மோடி நடத்திய முதலமைச்சர்கள் கூட்டத்தில் மம்தாவுக்கு வாய்ப்பளிக்கவில்லை. இதனால் கோபமடைந்த மம்தா அடுத்த கூட்டத்தில் பங்கேற்காமல் தனது தலைமைச் செயலரை பிரதிநிதியாக அனுப்பினார்.
தற்போது மீண்டும் ஒருமுறை தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது குறித்து மம்தா கடும் அதிருப்தியை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சொகுசு விடுதி அரசியல்: கிரிக்கெட், பொருளாதார ஆலோசனை.. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிஸி..!