ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் செய்யப்பட்டு, வணிக நிறுவனங்கள் மீண்டும் இயக்கப்பட்டு வரும் நிலையில், தனியார் அலுவலகங்கள் 50 விழுக்காடு ஊழியர்களுடன் ஒருநாள் விட்டு ஒருநாள் இயங்க அனுமதி அளித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாளை முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்கப்படவுள்ள நிலையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, அம்மாநிலத்தின் மால்களில் உள்ள கடைகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநிலத்தில் முடி திருத்தும் நிலையங்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், முடி திருத்த உபயோகிக்கப்படும் உபகரணங்களை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யாமல் ஆறு நபர்களுக்கு மேல் உபயோகப்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவகங்களைப் பொறுத்தவரை தனி மனித இடைவெளி கடுமையாகப் பின்பற்றப்படவேண்டும் என்றும், மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும், பார்வையாளர்கள் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தாங்கள் ஊரடங்கு அறிவிக்கவில்லை எனினும் மத்திய அரசு அறிவித்துள்ளது போல் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என மம்தா இந்த அறிவிப்புகள் குறித்து தெரிவித்துள்ளார். அனைத்து பெரிய கடைகளும், மே 21ஆம் தேதி முதல் தொடங்கவும், சந்தைகள் 27ஆம் தேதி தொடங்கி ஒருநாள் விட்டு ஒருநாள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மெசஞ்சர் ரூம் - சோதனை செய்கிறது வாட்ஸ் அப்... பயனர்கள் குதுகலம்!