மேற்கு வங்க மாநிலத்தில் மக்களவை பொதுத்தேர்தலுக்கு முன்பிருந்தே ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தில் கடும் மோதல் இருந்துவந்த நிலையில், தேர்தலுக்கு பின்னர் மோதல் போக்கு சற்று தணிந்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இச்சந்திப்பின்போது, மேற்குவங்க அரசுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க பிரதமரிடம் அவர் கோரிக்கை வைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, ’மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பங்ளா’ என மாற்றிட பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாகவும், அவர் தன்னால் இயன்றதை செய்கிறேன் என உத்தரவாதம் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், பிரதமரைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் மம்தா பானர்ஜி சந்திக்க இருப்பதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.