புவிசார் அரசியல் மற்றும் சர்வதேச நிலைப்பாடு எப்போதும் சமமாக இருத்தல் வேண்டும், சில நேரங்களில் இந்த நிலைப்பாடு தவறும். அதுதான் தற்போது நடந்து வருகிறது. பாதுகாப்பு பொறுப்பு, வர்த்தக ஏற்பாடுகள், பன்முக கட்டமைப்பு அல்லது பலதரப்பு புரிதல்கள் ஆகியவற்றை கணிக்கவோ, வரையறை செய்யவோ முடியாது. இந்த சூழல் தற்போது கொரோனா நோய்ப்பரவல் விஷயத்தில் மெய்யாகியுள்ளது.
இந்த சூழலை உருவாக்கிய ‘பெருமை’ இரண்டு பேரைச் சேரும்: 2017 ஜனவரி மத்தியில்அமெரிக்காவின் 45வது அதிபராக பதவியேற்றுக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப் மற்றும் 2012 முதல் சீன கம்யூனிச கட்சியின் ‘பேரரசராக’ ஆட்சி செய்யும் ஜி ஜிங்பிங்.
நம்பிக்கை தகர்ப்பாளரான ட்ரம்ப் ஆட்சியில் அமர்ந்தவுடனே, ’அமெரிக்காவை மீண்டும் பெருமைமிக்கதாக’ மாற்றுவது அல்லது ‘ அமெரிக்கா தான் முதலிடம்’ என்ற முழக்கங்களை முன்வைத்தார். அமெரிக்காவின் பெருந்தன்மையை கூட்டுறவு நாடுகள் தவறாக பயன்படுத்தவதாக குற்றம் சாட்டினார். குறிப்பாக, ஜி7 மற்றும் நேட்டோ நாடுகளை வெளிப்படையாக குற்றம் சாட்டியதோடு, அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் அமைதியைப் பயன்படுத்திக் கொண்டு பலன்களை முழுதாக அனுபவிக்கின்றனர், இதற்காக அமெரிக்காவிற்கு செலவினங்களை அதிகரித்து விடுவதோடு, அமெரிக்காவின் சுமையில் கொஞ்சம் கூட பகிருந்து கொள்வதில்லை, குறிப்பாக அவர்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% கூட பாதுகாப்பிற்கு அளிப்பதில்லை என்று பகிரங்கமாக சாடினார்.
இதுமட்டுமின்றி, சுழல்காற்று எப்படி பொருட்களை அடித்துச் செல்கிறதோ, அதுபோல முந்தைய அதிபரான ஒபாமாவின் நற்பெயரை சிதைப்பதில் குறியாக இருந்தார். டிடிபி (ட்ரான்ஸ் -பசிபிக் கூட்டுறவு) வர்த்தக விவகாரம், வானிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் ஜேசிபிஓஏ (விரிவான கூட்டு செயல்திட்டம்) அல்லது ஈரான் அணு விவகாரம் உள்பட அனைத்தையும் சர்ச்சைக்குள்ளாக்கினார். ஈரான் நல்லிணக்க ஒப்பந்த கடிதம் அளிக்கப்பட்ட போதும், அந்நாட்டின் மீது கடும் நடவடிக்கையை ட்ரம்ப் மேற்கொண்டார். உலக நாடுகளின் தலைவர்களை மட்டுமின்றி, தனக்கு நெருக்கமான ஜெர்மனி, ஃப்ரான்ஸ், கனடா, தென்கொரியா ஆகிய நாடுகளையும் வம்பிழுத்தார்.
ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் ட்ரம்ப் சரியாகச் செய்தார்.அது சீனாவுக்கு கொடுத்த குட்டு! டிசம்பர் 2016 அன்று வெற்றி பெற்றதும், ஆச்சரியப்படுத்தும் விதமாக, 35 ஆண்டு காலமாக இருந்த அமெரிக்காவின் ‘சீனாவின் ஒரே கொள்கையை’ புறந்தள்ளிவிட்டு, தைவான் அதிபரின் வாழ்த்துச் செய்தியை ஏற்றுக்கொண்டார். இது குறித்து தனது ட்விட்டர் செய்தியில், “நான் வெற்றி பெற்றதற்காக தைவான் அதிபர் எனக்கு வாழ்த்து சொன்னார். நன்றி! தைவானுக்கு பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை அமெரிக்கா விற்கிறது, அதனால் அவரது வாழ்த்து அழைப்பை நான் ஏற்கக் கூடாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
சீன தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தினாலும், பெரிதாக அந்நாடு பொங்கவில்லை. “தைவான் மூலம் இழுக்க முயற்சிக்கிறது” என்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சஎர் வாங் யி கூறியதுடன், அமெரிக்காவுடனான அரசியல் அடித்தளத்தை ” பாழாக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
சீன தரப்பில் இப்படி தெரிவிக்கப்பட்டாலும், அமெரிக்காவின் திறந்த நிலைப்பாட்டை பல ஆண்டுகளாக சீனா நன்றாக பயன்படுத்திக் கொண்டது என்ற தனது நிலைப்பாட்டில் ட்ரம்ப் உறுதியாக நின்றர். சீனாவுடன் 375 பில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறை இருப்பதாக வெளிப்படையாக கூறினார். அமெரிக்க நலனுக்கு எதிராக தங்கள் தொழிற்துறையை சீனா உளவு பார்ப்பதாகவும், தந்திரத்தால் ஐடி நிறுவனங்களை அபகரிப்பதாகவும், எல்லைகளில் ஊடுருவல் செய்வதாகவும் பகிரங்க குற்றம் சாட்டினார். சீன தயாரிப்புகளுக்கு விலைப்பட்டியல் நியமித்ததோடு, அமெரிக்க நிறுவனங்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறினார். அத்துடன், மக்கள் சுதந்திர ராணுவத்தின் நேரடி தொடர்பில் உள்ள ஹுவாய், இஸட்டிஇ போன்ற சீனாவின் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்தார்.
இன்னொருபுறம் சீன அதிபர் தனது குறிக்கோள் என்னும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினார். உள்நாட்டு கட்டுப்பாடுகளை இறுக்கினார், எதிர்க்கட்சிகளின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவர்களின் குரல்களை அடக்கினார். அமைதிக்கான சூழல் அதிகரிப்பது போன்ற பாசாங்கு தகர்ந்தது. தைவான், திபெத், ஹாங்காங் மற்றும் ஜிங்ஜியாங் மீதான அச்சுறுத்தல்கள் அதிகமாகின. தென் சீனக் கடல் பகுதியில் ராணுவ தளவாடங்கள் அதிகரிக்கப்பட்டன. இதுமட்டுமின்றி அண்டை நாடுகளான ஜப்பான், ஆஸ்திரேலியா, ஆசியான் நாடுகள் மற்றும் இந்தியாவுடன் மூர்க்கத்தனத்தை சீனா காட்டத் தொடங்கியது.
அமெரிக்காவின் ஆதிக்கத்தை ஓரம் கட்ட வேண்டும் என்பதற்காக, தன்னை இரண்டாவது பெரிய 13.5 ட்ரில்லின் டாலர் பொருளாதார நாடு என்று பெருமை பேசிய சீனா, தனது ராணுவ படைகளை நவீனமாக்கியது, அத்துடன் நீல நீர் கடற்படை உருவாக்குதல் மற்றும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ராணுவ தளாங்களை ஆக்கிரமித்தல் போன்ற நடவடிக்கைகளில் இறங்கியது.
இதற்கிடையே பிஆர்ஐ (பெல்ட் மற்றும் சாலை திட்டம்) திட்டத்தை கொண்டு வந்து தனது ஏற்றுமதியை அதிகரித்து, அதன் மூலம் வளரும் நாடுகளை கடனில் சிக்க வைக்கும் நடவடிக்கையையும் சீனா தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் தன்னை பலம் வாய்ந்த சக்தியாக சீனா காட்டிக்கொண்டது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதத்தில் காய் நகர்த்தியது.
”சீனா தனது ராணுவத்தை வேகமாக பலப்படுத்துவதன் மூலம், தற்போது உலகிற்கு அச்சுறுத்தல் அளிக்கிறது, உண்மையக் கூற வேண்டுமெனில் அமெரிக்காவின் பணத்தை சீனா பயன்படுத்துகிற்து” என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார். இந்திய-பசிபிக் கட்டுமானத்தை குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அது சீனா பங்களிப்பு இல்லாத ஆசிய பசிபிக்காக இருக்கும் என்றார். கடந்த 2019 செப்டம்பர் மாதம் க்வாட் (ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா) பேச்சுவார்த்தை, அமைச்சர்கள் மட்டத்தில் தொடங்கியது. தற்போது அமெரிக்கா தனது க்வாட் ப்ளஸ் திட்டத்தை தென் கொரியா, வியட்நாம், நியூசிலாந்து மற்றும் ஃப்ரான்ஸ் ஆகிய நாடுகளுடன் விரிவுபடுத்த முயற்சிக்கிறது.
ஜி7 நாடுகளின் கூட்டிணைவை ஜி 11 ஆக மறு கட்டமைப்பு செய்து அதில் சீனாவை சேர்க்காமல் ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை இணைக்கப் போவதாக, கடந்த மே 2020 இறுதியில் ட்ரம்ப் அறிவித்தார். ஜி7 நாடுகள் இதற்கு தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இந்த சூட்டோடு கோவிட் 19 பாதிப்புகள் குறித்து வாஷிங்டனில் ஜி7 உச்சிமாநாடு நடத்தவும் முன்மொழிந்தார், ஆனால் இதை ஜெர்மனி அதிபர் மெர்கல் நிராகரித்தார்.
”தற்போது உலகில் நிலவி வரும் விவகாரங்களை ஜி7 எதிரொலிக்காது என எண்ணுகிறேன். அந்த குழுவில் உள்ள நாடுகளால் பயனேதும் இல்லை” என்று தெரிவித்துள்ள ட்ரம்ப், செப்பம்பரில் யுஎன்ஜிஏ அமர்வு நடக்கும்போது அல்லது அதிபர் தேர்தலுக்குப் பின், இந்த அமைப்பின் ’விரிவான’ கட்டமைப்பை ஏற்படுத்தப்போவதாக கூறியுள்ளார். ஜி7 என்பது பணக்கார நாடுகளின் அமைப்பு என்று சாடியுள்ள ட்ரம்ப், முன்பு போல எப்போதாவது சம்பிரதாயத்துக்கு கூடும் கூட்டம் போல அல்லாமல், இந்தியா போன்ற வேகமாக வளரும் பொருளாதாரங்களை சேர்த்துக் கொண்டு ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ட்ரம்ப் உடனான தொலைபேசி உரையாடலின் போது, இந்த உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்த துணை நிற்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார். இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ள சீனா “ஜி7 அமைப்பானது, ஜி11 அல்லது ஜி 12 என எப்படி மாறினாலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது” என்று தெரிவித்துள்ளது.
ஆயினும், இந்த விரிவாக்கம் நிச்சயமாக நடக்கும் என்று தெரிகிறது. ஜி7 நாடுகளுக்குள் மட்டுமின்றி, புதிய அமெரிக்க அதிபரின் புத்துயிரூட்டும் நடவடிக்கையால், விரிவான ஒப்பந்தங்கள் போடப்பட்டு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதே வேளையில் ஜி20 நாடுகளின் அமைப்பைப் போலவே இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கொரியா மற்றும் ஜி7 நாடுகளை உள்ளடக்கிய டி10 (டெமாக்ரடிக் 10) அமைப்பை உருவாக்க இங்கிலாந்து முயற்சிக்கிறது.
பன்முகக் கூட்டிணைவிற்கான அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர். ஜெய்சங்கர் கூறும்போது, “அடித்தளம் சிறப்பாக இல்லாத எந்த ஒரு கட்டமைப்பும் செயலற்றதாகவும் முக்கியத்துவமில்லாத ஒன்றாவும் கருதப்படும். அதனால் தான் நங்கள் சீரமைக்கப்பட்ட பன்முகத்தன்மையை கொண்டு வர குரல் கொடுக்கிறோம். இந்த நிலைப்பாட்டை அவசரமாக எடுப்பதற்கு சீனாவின் நடத்தை முக்கிய காரணம்.” என்றார். இந்த அமைப்பின் செயலாளர் போம்பியோ கூறும்போது, “ சீனாவின் இந்த விரிவாக்கம் நமக்கு சவாலான நேரத்தை அளித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் சீனாவின் கம்யூனிச கட்சி, முரட்டு ஆசாமியாக செயல்படுகிறது” என்றார். சீன ராணுவத்துக்கு தக்க பதிலடி தரும் வகையில் அமெரிக்க படைகளும் கடற்படை தளவாடங்களும் ஆசியாவில் பலம் கூட்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் சர்வதேச நிலைப்பாடு தற்போது மோசமாகியுள்ளது. தனது ஆதிக்க நிலைப்பாட்டால், சீன அதிபர் தற்போது தப்ப முடியாத நிலையில் இருக்கிறார். தற்போதுள்ள சூழலை அவர் தொடர்ந்தால், கண்டிப்பாக உலகின் பெரும்பகுதியை பகைத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார், அது சீனாவுக்கு பெரும் ஆபத்தாகும் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுப்பதால், மேற்கத்திய சக்திகளை ஒன்றிணைவதற்கு சீனா வாய்ப்பு கொடுத்துள்ளது. சுருக்கமாக சொல்வதானால் உலகம் தற்போது அசாதாரண சூழலில் உள்ளது. நிலைமை எப்படி மாறும் என்று தெரியவில்லை. இந்த நிலையில் முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டிய கட்டத்தில் நாடுகள் உள்ளன.