மக்களவைத் தேர்தலையொட்டி குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடியும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் பல்வேறு பகுதிகளில் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் படான் பகுதியில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ’இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் இருந்தபோது அவர்களை நாம் தொடர்பு கொண்டோம். அப்போது, அபிநந்தனின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் சும்மா விடமாட்டோம் என பாகிஸ்தானை எச்சரித்தோம்’ என்றார்.
இதனைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலம் பால்மரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பேசிய அவர், ’பாகிஸ்தானின் மிரட்டல்களுக்கெல்லாம் இந்தியா அஞ்சாது. எங்களிடம் அணு ஆயுதம் இருப்பதாகக் கூறி, அவ்வப்போது இந்தியாவை பாகிஸ்தான் மிரட்டுகிறது. பிறகு இந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்கள், தீபாவளிக்கு வெடிக்கவா வைக்கப்பட்டுள்ளது என்றார்.