மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில், தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நேற்று தொடங்கிய, 'அக்வா-அக்வாரிய இந்தியா' (Aqua-Aquaria India) என்ற சர்வதேச மீன்வளக் கண்காட்சி, ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியின் முதல் நாளான நேற்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டார்.
பின்னர், கண்காட்சியை தொடங்கிவைத்து பேசிய அவர், 'மீன்வள உற்பத்தியில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது.
விவசாயத்தில் லாபம் ஈட்ட முடியாததால் அத்துறையிருந்து ஏராளமானோர் வெளியேறி, மற்ற துறைகளுக்குச் செல்லும் அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஆதலால், மீன் வளர்ப்பு, பால்பண்ணை, உணவு பதப்படுத்துதல் என விவசாயத்தை பன்மயமாக்கி, மக்களை அதிகளவில் விவசாயத்தில் ஈடுபட செய்யவேண்டும். அதற்கு நாட்டு மக்கள் அனைவரும் விவசாயிகளுடன் துணை நிற்கவேண்டும்" என்றார்.
நிகழ்ச்சியில் தெலங்கானா கால்நடைத்துறை அமைச்சர் தலசானி, ஆந்திர அமைச்சர் மொய்பிதேவி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.