டெல்லி தமிழ் மாணவர் சங்க விழாவில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியதாவது, நீங்கள் இந்த நாட்டின் எதிர்காலம். நாளை இந்த தேசத்தை வழிநடத்தும் ஆற்றல் நீங்கள்தான். ஆகவே படிக்குப்போது, தேசிய பிரச்னைகளிலும் கவனம் செலுத்துங்கள். இது எதிர்காலத்தில் உங்களை தயார்படுத்த உதவும். மாணவர் காலத்தில் நாட்டிற்காக போராடியவர்களே சிறந்த தலைவர்களாக இருக்கின்றனர்.
அவர்கள் அத்தகையை படிப்பை அங்கு கற்றுக்கொண்டனர். தற்போது நீங்கள் உருவாகும் காலத்தில் உள்ளீர்கள். ஆகவே முடிந்தவரை கற்றுக்கொள்ளுங்கள் என்று நான் உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன். உங்கள் நேரத்தின் 50 விழுக்காட்டை வகுப்பறைக்கு வெளியே செலவிடுங்கள்.
நீங்கள் இயற்கையை நெருங்கி ரசிக்க வேண்டும். அது உங்களுக்கு படிப்பை தரும். அது கற்பிக்கும் பாடம் உங்களை சிறந்த மனிதராக உருவாக்கும். மனிதரை மட்டுமல்ல, மிகச்சிறிய உயிரைக் கூட உணரும் தன்மையை உங்களுக்கு கொடுக்கும். ஒரு மனிதன் சுற்றுச்சூழலை கவனித்து நிலையாக வளர வேண்டும். அதேபோல் விளையாட்டில் கவனம் செலுத்துங்கள். அது உங்கள் உடலோடு, மனதையும் வலிமைப்படுத்தும்.
இந்திய வரலாறை படியுங்கள். வரலாறு என்பது வெள்ளைக்காரா்கள் நமக்கு கற்பித்ததல்ல. இந்தியாவில் தனது ஆட்சியை நீடிக்க வேண்டும், அது நிலைக்க என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணங்களை அவர்கள் கொண்டிருந்தனர். அவர்களின் நோக்கம் பரந்த, இயற்கை வளங்களை சுரண்டுவதே ஆகும்.
21ஆம் நூற்றாண்டின் சவால்களை இந்திய மாணவர்கள் திறம்பட கையாள வேண்டும். சமுதாயத்தில் பலவீன மனிதர்களை கூட, பலமாக மாற்றும் ஆயுதம் கல்வி மட்டுமே. அந்த முழுமையான கல்வி நமக்கு தேவை. நமது பாரத நாடு வளமான மொழி வளத்தை கொண்டது. அந்த வளத்தை மீட்டெடுக்க வேண்டும். இதனை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
நம் நாட்டில் 19,500 மொழிகள் உள்ளன. 19,500க்கும் மேற்பட்ட கிளை மொழிகள் பேசப்படுகின்றன. இந்த பன்முகதன்மையை நாம் மதிக்க வேண்டும். அதனை வளர்க்க வேண்டும். அதைப் பற்றி நாம் பெருமை கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தங்களின் தாய் மொழியில் அடிப்படை கல்வி பயில வேண்டும்.
கற்றல் நம் மொழிகளை பாதுகாப்பதோடு நம்மை நீண்ட தூரம் அழைத்துச் செல்லும். இவ்வாறு குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு மாணவர்கள் மத்தியில் பேசினார். அதன்பின், தனது உரையை ஜெய்ஹிந்த் என்று கூறி நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: சியரா லியோன் நாட்டுடன் நல்லுறவு ஏற்படுத்த இந்தியா முயற்சி!