இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் நித்யானந்தாவின் சொந்த நாடு குறித்து கேள்விகள் எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த குமார், தகவல்கள் அவ்வாறு தெரிவிக்கின்றன என மழுப்பலாக பதிலளித்தார். மேலும் அவரின் கடவுச்சீட்டு காலாவதி ஆகிவிட்டது. அதன் பின்னர் அவர் மறுகடவுச் சீட்டு வேண்டி விண்ணப்பித்து இருந்தார்.
அவர் மீது வழக்குகள் நிலுவையில் இருந்ததால், அவருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படவில்லை என தெரிவித்தார். தன்னை தானே கடவுளாக அறிவித்துக் கொண்டு சுற்றி திரிந்த நித்யானந்தாவுக்கு கர்நாடகா, குஜராத் மற்றும் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமம் உள்ளது.
இவரது கர்நாடக ஆசிரமத்தில் பாலியல் உள்ளிட்ட தவறுகள் நடப்பதாக 2018ஆம் ஆண்டு புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் நான்கு பெண் குழந்தைகளின் தந்தை ஆமதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர். நித்யானந்தாவின் ஆசிரமத்திலும் சோதனைகள் நடந்தது. அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் காவலர்களின் கைது நடவடிக்கைக்கு பயந்து நித்யானந்தா தலைமறைவாகி விட்டார். தற்போது அவர் வெளிநாட்டில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, கைலாசா என்ற பெயரில் தனி இந்துநாடு உருவாக்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு எதிராக சர்வதேச காவலர்களின் உதவியை நாட குஜராத் போலீசார் முடிவெடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : நித்யானந்தாவின் இந்து தேசம் உண்மையா.?