தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது. காங்கிரஸ், இடதுசாரி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட பல கட்சிகள் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, "மக்களின் கவனத்தை முக்கிய பிரச்னைகளிலிருந்து திசை திருப்ப பாஜக முயற்சிக்கிறது. திசை திருப்புவது மட்டுமல்ல, இந்து நாட்டை அமைப்பதை பாஜக கொள்கையாக வைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகளை நரேந்திர மோடி அமல்படுத்திவருகிறார்.
இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. இதனை பொருளாதார ஆய்வாளர்களே ஒத்துக்கொண்டுள்ளனர். வேலைவாய்ப்பின்மை பிரச்னை கட்டுப்பாடின்றி செல்கிறது. உள்நாட்டு மொத்த உற்பத்தி குறைந்துள்ளது, விவசாயிகள் தவித்துவருகின்றனர். மோடியோ மகிழ்ச்சியான உலகில் வாழ்ந்துவருகிறார்.
மக்களை பிரிக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தினால் அதனை இடதுசாரி கட்சிகள் ஆதரிக்காது" என்றார்.