அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் நிறுவனரும், ஹைதராபாத் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார்.
அப்போது அவர் கூறும்போது, “வங்கதேசத்தில் நடந்த ஒன்றை, இந்தியாவில் நடந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் காணொலிக் காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளார். முகமது அலி ஜின்னாவின் தவறான கருத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். அதே நேரத்தில் இந்திய முஸ்லிம்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்” என்றார்.
மேலும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும் தாக்கிப் பேசினார். என்.ஆர்.சி., குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் பிற எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது அந்தக் காணொலி காட்சியை நீக்கிவிட்டார். போராட்டக்காரர்களைக் காவலர்கள் கண்மூடித்தனமாக தாக்குதவதுபோல் அந்தக் காணொலிக் காட்சிகள் அமைந்துள்ளன.
2013ஆம் ஆண்டு வங்கதேசத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்திய முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றனர் என்று இம்ரான் கான் பதிவிட்டிருந்தார்.
இதற்கு ஓவைசி, “இந்திய முஸ்லிம்கள் குறித்து கவலைகொள்ள வேண்டாம், பாகிஸ்தானை கவனியுங்கள்” எனப் பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: 'கண்ணனை கைதுசெய்யக் காரணம் நவீன மனு தர்மமா?' - கி. வீரமணி