கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரக்கூடாது எனவும், அத்தியாவசியப் பொருள்கள் வாங்கும்போதும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல இடங்களில் ஊரடங்கு மீறுபவர்களைக் காவல் துறையினர் தண்டித்தும், எச்சரித்தும் வருகின்றனர். கரோனா காலத்தில் காவல் துறையினரின் அர்ப்பணிப்பைக் கண்டு பொதுமக்கள் கரோனா வாரியர்ஸ் என சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.
இந்நிலையில் அத்தியாவசிய பொருள்கள் வாங்கும்போது மக்களைத் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வலிறுத்திய காவலர்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் கரோனா ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் திகியபாரா பகுதியில் உள்ள மார்க்கெட்டில் பொதுமக்கள் அதிகளவில் தீடீரென கூடியுள்ளனர்.
இதனையறிந்த காவல் துறையினர் இரண்டு பேர், பொது இடங்களில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் ஊரடங்கு உத்தரவை மீறாமல் இருக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் காவல் துறையினரை பொதுமக்கள் திடீரென கற்களை வீசி தாக்கியுள்ளனர். பொதுமக்களின் கும்பல் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக திகியபாரா பகுதியில் உள்ள சோதனைச்சாவடிக்குள் காவலர்கள் நுழைந்தபோதும், தாக்குதல் நிறுத்தப்படவில்லை. இந்தத் தாக்குதலில் காவல் துறையினரின் இரு வாகனங்களும் சேதமடைந்தன. தாக்கப்பட்ட காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாநில பாஜகவினர் பேசுகையில், ''மாநில அரசின் சார்பாக ஊரடங்கு உத்தரவு சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை. மம்தா பானர்ஜி அரசின் நிர்வாகத் தோல்வி இது'' என விமர்சித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள மாநில வனத்துறை அமைச்சர் ரிஜிப் பானர்ஜி பேசுகையில், '' காவலர்கள் அவர்களுடையப் பணியை சரியாக செய்துவருகிறார்கள். காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இதையும் படிங்க: இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய இரு காவலர்கள் பணியிடை நீக்கம்