சம்பல்பூர் மாவட்ட நிர்வாகம், ரெங்கலி வன எல்லைக்குட்பட்ட குமேய் பகுதியிலுள்ள பெண்கள் சுய உதவிக்குழுக்களை சால் இலைகள் மூலம் தட்டுக்களை செய்ய ஊக்குவித்துவருகின்றனர். இது ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளை ஓரளவு பூர்த்தி செய்ய உதவுகிறது.
தட்டுகளை செய்ய இப்பகுதியிலுள்ள பெண்களுக்கு தேவையான பயிற்சிகளையும் இயந்திரங்களையும் இம்மாவட்ட நிர்வாகம் வழங்குகிறது. பாரம்பரிய முறைக்கு பதிலாக இயந்திரங்களைக் கொண்டு மேம்பட்ட முறையில் தட்டுகளை தயாரிக்கவும் மாவட்ட நிர்வாகம் பயிற்சி அளிக்கிறது.
இது பிளஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த மட்டுமல்லாமல், அப்பகுதி மக்களை தன்னம்பிக்கையுடன் தங்கள் வாழக்கையை நடத்தவும் வழிவகை செய்கிறது.
இப்பகுதியிலுள்ள அடர்ந்த காடுகளில் மிக அதிக அளவில் கிடைக்கும் சால் இலைகள், இங்குள்ள பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தினமும் காலையில் காடுகளுக்குச் சென்று சால் இலைகளைச் சேகரிக்கும் பெண்கள், பின்னர் அங்குள்ள பயிற்சி நிலையங்களுக்குச் சென்று பரம்பரிய முறையில் தட்டுகளையும் கிண்ணங்களையும் செய்கின்றனர்.
கைகளால் செய்யப்படும் இந்த தட்டுகளும் கிண்ணங்களும் வெயிலில் காயவைக்கப்பட்டு, பின்னர் தையல் இயந்திரங்களைக் கொண்டு தைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து, இவை அழுத்தும் இயந்திரங்களைக் கொண்டு அழுத்தப்பட்டு ஒழுங்கான வடிவத்தைப் பெறுகிறது. பாரம்பரிய முறையில் கைகளில் செய்யப்படும் தட்டுகளையும் கிண்ணங்களைக் காட்டிலும் இந்த முறையில் செய்யப்படும் பொருள்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.
இதற்கு முன்னர் நாள் ஒன்றுக்கு 100 தட்டுகள் மட்டுமே தயார் செய்ய முடிந்ததாகவும், ஆனால் இப்போது இந்த இயந்திரங்களின் உதவியால் தினமும் 500 தட்டுகள் வரை தயாரிக்க முடிவதாக இப்பகுதியுள்ள பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு தட்டு தயாரிக்க 70 பைசா மட்டுமே ஆகும் நிலையில், இத்தட்டுகள் சந்தையில் ரூபாய் 3.50 வரை விற்பனையாகிறது.
சம்பல்பூர் மாவட்ட நிர்வாகம், வனத்துறை, ஒடிசா கிராம அபிவிருத்தி மற்றும் சந்தைப்படுத்தல் சங்கம் (ORMAS), ஒடிசா வாழ்வாதார பணி (OLM) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளால், இந்த முயற்சி விரிவுபடுத்தப்படவுள்ளது. இருப்பினும் இத்திட்டம், ஒடிசா வனத்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சம்பல்பூர் வன பிரிவாலேயே தொடங்கப்பட்டது.
இதுவரை வனத்துறை சார்பில் 10 தையல் இயந்திரங்களும் நான்கு அழுத்தும் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில், நிரந்தரமாக பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்கான தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.ஆர்.எஸ்.(CRS) நிதியிலிருந்து இப்பகுதியிலுள்ள பெண்களுக்கு இயந்திரங்களை இலவசமாக வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மாவட்ட கிராம அபிவிருத்தி அமைப்பின் திட்ட இயக்குநர் சுகந்தா திரிபாதி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "இப்போது தயாரிக்கப்படும் தட்டுகள் கோவாவுக்கு அனுப்பப்படுகிறது. வரும் காலங்களில் இவை ராய்பூர், போபால், கொல்கத்தா ஆகிய பகுதிகளுக்கும் அனுப்பப்படும். மேலும், இவை உள்ளூர் சந்தைகளிலும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்" என்றார்.
இதையும் படிங்க: முத்ரா திட்டமும், பொதுத்துறை வங்கிகளின் அலட்சியமும்!