நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில் ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூரிலுள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அந்த எம்.எல்.ஏ.க்கள் தோன்றும் காணொலிக் காட்சிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியானது. அதில் எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலும் டீசர்ட், ட்ராக் பேண்ட் அணிந்திருந்தனர். ஒரு புறம் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். மறுபுறம் கால்பந்து ஆட்டமும் நடந்தது.
மாநிலங்களவை தேர்தலில் பாஜகவினர் குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸார் குற்றம் சுமத்தி உள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை பாஜக தரப்பு மறுத்துள்ளது.
காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைக்கு கே.சி. வேணுகோபால், நீரஜ் தாங்கி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் காங்கிரசுக்கு இரண்டு இடங்களும், பாஜகவுக்கு ஒரு இடமும் கிடைக்க சாத்தியக் கூறுகள் உள்ளன.
ஆனால் பாஜக சார்பில் இரண்டு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளளனர். இதுவே குழப்பத்துக்கு காரணம். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் ஜே.டபிள்யூ. மரியோட் சொகுசு விடுதி பெரிய கண்ணாடி ஜன்னல்களுடன் அழகாக காட்சியளிக்கிறது.