ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் வசித்துவந்தவர் பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் ஷேக் வசீம் பாரி. இவர் அதே பகுதியில் தனது தந்தை பஷீர் ஷேக் அகமது, சகோதரர் உமர் சுல்தான் ஆகியோருடன் இணைந்து கடை நடத்திவந்தார். இவர்கள் மூவரும் புதன்கிழமை இரவு கடையில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவரின் பாதுகாப்பிற்கு 10 தனிப்படைக் காவலர்கள் நியமிக்கப்பட்டும், எப்படி இந்தச் சம்பவம் அரங்கேறியது என்று விசாரிக்கையில் துப்பாக்கிச்சூட்டின்போது காவலர்கள் அங்கே இல்லை என்று தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதுகுறித்து காஷ்மீர் ஐஜிபி விஜய்குமார் பேசுகையில், ''பாஜக பிரமுகர் வசீம் பாரியின் பாதுகாப்புக்காகப் போடப்பட்ட காவலர்கள் அனைவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம். அதில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பேர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அவர்கள் இருவரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவரின் பெயர் அபித் ஹக்கானி, காஷ்மீரைச் சேர்ந்தவர். மற்றொருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்'' என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இதுதான் நாம் கனவு கண்ட இந்தியாவா?' சித்ரகூட் சம்பவம் பற்றி ராகுல் கேள்வி!