ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.ஆர். வேங்கடபுரம் கிராமத்தில் இயங்கி வரும் எல்ஜி பாலிமர்ஸ் ரசாயன தொழிற்சாலையில் ஸ்டைரீன் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் வசித்து வந்த 11 பேர் உயிரிழந்ததோடு, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்டைரீன் கசிந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனைப் பற்றி ஸ்டைரீன் பயன்பாட்டு நிபுணரான அனந்தராம் கணபதி ஈடிவி பாரத்திடம் பேசுகையில், ''நான் விசாகப்பட்டினத்தில் இயங்கி வந்த அதே ஆலையில் 1982 முதல் 1993 வரை ஆலையின் துணை மேலாளராகப் பணிபுரிந்தேன். நான் பணிபுரிந்தபோது இதனைப் போன்று எவ்வித விபத்துகளும் நடக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னதாக வெளிநாட்டில் ஸ்டைரீன் வெளியாகி விபத்து ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் ஸ்டைரீன் வாயுவால் எவ்வித விபத்துகளும் நடக்கவில்லை.
ஸ்டைரீனை பயன்படுத்தியது எனது வாழ்வின் முக்கிய அனுபவம். ஏனென்றால் அதனை நான் மூலப்பொருளாகவும். வேதிப் பொருளாகவும் கையாண்டுள்ளேன். நிச்சயம் அது மற்ற கெமிக்கல்களைப் போல் அல்லாமல் மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டிய கெமிக்கல் தான்.
பாலிமரைசேஷன் (polymerization) நடக்கும்போது ஏதேனும் தவறு நடந்திருக்கலாம். ஏனென்றால் பாலிமரைசேஷனின்போது தவறு நடந்தால், கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இந்த விபத்து அதீத வெப்பத்தால் ஏற்பட்டதா என்பது பற்றி விசாரணை நடக்கிறது. ஆனால் ஸ்டைரீன் விபத்து எப்படி நடந்தது என்பதைக் கண்டறிவது கடினமான விஷயம்.
அதேபோல் அதீத வெப்பத்தால் இந்த விபத்து நடக்க வாய்ப்பில்லை. ஆலையிலிருக்கும் ஒரு சேமிப்புக் கலனில் ஏற்பட்ட அழுத்தத்தால் விஷவாயு ஸ்டைரீன் மோனோமர் கசிந்துள்ளது. விஷவாயு வெளியானபோது ஏற்பட்ட பதற்றத்தில் மக்களுக்குச் சுவாசிக்க சுத்தமான காற்று இருந்திருக்காது. அதனால் தான் உயிரிழந்திருக்கிறார்கள்'' என்றார்.
இதையும் படிங்க: 'விவேகமற்ற கேள்விகளால் பீதியைக் கிளப்ப வேண்டாம்' - காங்கிரசுக்கு கண்டனம்