ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.ஆர். வெங்கடாபுரம் என்ற கிராமத்தில் இயங்கிவந்த எல்.ஜி. பாலிமர்ஸ் தனியார் ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட ஸ்டைரீன் விஷவாயுக் கசிவினால் ஒரு சிறுமி உள்பட 12 பேர் உயிரிழந்தும், 2000-க்கும் மேற்பட்டோர் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சி.பி.சி.பி.) தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்.ஜி.டி.) ஆகியவை எல்.ஜி. பாலிமர்ஸ் ரசாயனத் தொழிற்சாலையிடம் விளக்கம் கோரியுள்ளன.
இந்தப் பேரிடர் காரணமாக ஏற்பட்ட நாசங்களைக் கவனத்தில்கொண்டு முதல்கட்டமாக 50 கோடி ரூபாயை வைப்புத்தொகையாகச் செலுத்துமாறு எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலைக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை கிடைத்ததும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினம் தனியார் ரசாயன ஆலையால் ஏற்பட்ட ஸ்டைரீன் விஷவாயு கசிவுப் பேரிடர் சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், எல்.ஜி. பாலிமர்ஸ் ஆலையிலிருந்து சுமார் 13,000 டன் ஸ்டைரீனை தென் கொரியாவின் தலைநகர் சியோவில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையகத்திற்கு அனுப்ப கப்பல் அமைச்சகத்தின் உதவியுடன் ஆந்திரப் பிரதேச அரசு சிறப்பு சரக்கு கப்பல்களை ஏற்பாடு செய்தது.
இது தொடர்பாக விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வி. வினய் சந்த் கூறுகையில், “சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 13,000 டன் ஸ்டைரீனை விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இரண்டு தொட்டிகளில் நிறுவனம் சேமித்துவைத்திருந்தது.
அதில் 8,000 டன் ஸ்டைரீன் இரண்டு சரக்கு கப்பல் மூலம் திங்களன்று (மே 11) அனுப்பிவைக்கப்பட்டது. மீதமுள்ள 5,000 டன் ஸ்டைரீனை புதன்கிழமையன்று (மே 13) அனுப்பவுள்ளோம். ஆலைக்குள் இருக்கும் சேமிப்புத் தொட்டியில் எஞ்சியிருக்கும் ஸ்டைரீன், திடப்படுத்தி அப்புறப்படுத்தவுள்ளோம்” என்றார்.
இதற்கிடையே, ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளபடி விஷ வாயுக்கசிவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாயும், விபத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவியின் உதவியோடு சிகிச்சைப் பெற்றுவருபவர்களுக்கு பத்து லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட்டுவருகிறது.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கிராம மக்களின் வங்கிக் கணக்குகளிலும் ரூ.10,000 செலுத்துமாறு அலுவலர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
நிவாரண உதவிகள் வழங்கப்படுவதில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதற்காக அந்தந்த கிராம செயலகங்களில் பயனாளிகளின் பட்டியல் கட்டாயம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்று ஆந்திரப்பிரதேச அரசு வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க : கரோனா நெருக்கடியில் தொழிலாளர்களைச் சுரண்டுவதை ஏற்க முடியாது: ராகுல் காந்தி