டெல்லியில் 11 மாத குழந்தை வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்தது. கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த குழந்தையை பெற்றோர்கள் அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தையின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்றும் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குழந்தை சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் அடம்பிடித்துள்ளது. அதன் பின்னர், குழந்தையின் தாய் மருத்துவருக்கு ஒரு யோசனையை கூறினார். அதன்படி குழந்தைக்கு மிகவும் பிடித்த பொம்மையான 'பாரி' என்ற பொம்மைக்கு முதலில் கட்டு போட்டு சிகிச்சை அளித்தனர். தன்னுடைய பொம்மைக்கு சிகிச்சை அளிப்பதை பார்த்த அக்குழந்தை சிகிச்சைக்கு ஒத்துழைத்துள்ளது. குழந்தையினால் பொம்மையும் தற்போது சேர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறது. அருகிலிருப்பவர்கள் இக்குழந்தையுடன் பொம்மையும் சேர்ந்து சிகிச்சை பெற்று வருவதை வியப்புடன் பார்த்துவருகின்றனர்.