பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் அகண்ட ஸ்ரீநிவாஸ் மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் பேஸ்புக்கில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.
மதத்தின் அடிப்படையிலான இந்தக் கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து பெங்களூருவிலுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது.
இந்நிலையில் அங்கு பெரும் வன்முறை வெடித்தது. அதைத்தொடர்ந்து நடந்த கல்வீச்சு மற்றும் வன்முறை சம்பவங்களில் 60க்கும் மேற்பட்ட காவலர்கள் தாக்கப்பட்டனர்.
இதையடுத்து காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். தற்போது உயிரிழப்பு மூன்று ஆக உயர்ந்துள்ளது.
எனினும் அந்தப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. இதனால் பெங்களூருவிலுள்ள டிகே ஹள்ளி மற்றும் கேஜி ஹள்ளி ஆகிய காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பெங்களூரு நகர காவல் ஆணையாளர் கமல் பண்ட் கூறுகையில், “நகரத்தில் இரு காவல்நிலையத்தில் 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (ஆக.11) இரவு நடந்த வன்முறைக்கு கண்ணியக் குறைவான பேஸ்புக் பதிவே காரணம்.
இதில் சம்மந்தப்பட்ட நபர் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போதுவரை கலவரத்தில் ஈடுபட்ட 110 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவை பதிவிட்டதாக கைது செய்யப்பட்டுள்ள நபர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தன்னுடைய சமூக வலைதள கணக்கு முடக்கப்பட்டு (ஹேக்) இவ்வாறு நடந்துள்ளது என வாக்குமூலம் அளித்துள்ளார்” என்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறும்போது, “இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. ஆனால் வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. சம்பவ பகுதியில் கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.
இதையும் படிங்க: பொது மக்கள், போலீஸ் இடையே மோதல்: 100 பேர் கைது!