உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் எட்டு காவலர்களைக் கொலைசெய்த வழக்கு உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி விகாஸ் துபே கடந்த ஜூலை 10ஆம் தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இதனிடையே, துபே மற்றும் அவரின் கூட்டாளிகள் என்கவுன்ட்டர் தொடர்பான வழக்குகளில் நீதிமன்ற விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, துபே தொடர்பான என்கவுன்ட்டர் வழக்கின் விசாரணைக் குழுவில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, ஓய்வுபெற்ற காவல் துறை அலுவலர் ஆகியோரை உத்தரப் பிரதேச அரசு நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. துபேவுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு இருந்தாலும், அவருக்குப் பிணை கிடைத்திருப்பது திகைப்பாக உள்ளது என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இதுகுறித்து நீதிமன்றம் மேலும் கூறுகையில், "ஒரு அரசாகச் சட்டத்தை நிலைநாட்ட வேண்டும். அது உங்களின் கடமை. விசாரணைக் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்கக் காலதாமதம் செய்யக் கூடாது. சிறைக்குச் செல்ல வேண்டிய ஒருவருக்குப் பிணை கிடைத்திருப்பது மிகப் பெரிய தோல்வியாகும்" என்றது. உத்தரப் பிரதேச அரசுக்கு ஆதரவாக ஆஜராகிய அரசின் துணை தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, இதுகுறித்து முடிவெடுக்க சற்ற நேரம் வேண்டும் என தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள காவல் நிலையங்களில் 60க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தேடப்பட்டுவந்த விகாஸ் துபே, கான்பூர் அருகே உள்ள பிக்ரு கிராமத்தில் பதுங்கியிருப்பதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விகாஸ் துபேவை கைதுசெய்யச் சென்ற எட்டுக் காவலர்களை, துபே மற்றும் அவரது கூட்டாளிகள் சுட்டுக்கொலை செய்தனர்.
இதையடுத்து விகாஸ் துபேவைப் பிடிக்க தீவிரம் காட்டப்பட்டது. ஜூலை 9ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்தில் விகாஸ் துபே கைதுசெய்யப்பட்டார். பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து விகாஸ் துபேவை உத்தரப் பிரதேசத்திற்கு அழைத்து வரும் வழியில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தைப் பயன்படுத்தி விகாஸ் துபே தப்பிக்க முயன்றதாகக் கூறி, காவல் துறையினர் விகாஸ் துபேவை என்கவுன்ட்டர் செய்தனர்.
இதையும் படிங்க: பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் அரசியலாக்கப்படுகின்றன - பாஜக தேசிய தலைவர் நட்டா