உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள காவல் நிலையங்களில் 60க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தேடப்பட்டுவந்த விகாஸ் துபே, கான்பூர் அருகே உள்ள பிக்ரு கிராமத்தில் பதுங்கியிருப்பதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விகாஸ் துபேவை கைதுசெய்யச் சென்ற எட்டுக் காவலர்களை, துபே மற்றும் அவரது கூட்டாளிகள் சுட்டுக்கொலை செய்தனர். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து விகாஸ் துபேவைப் பிடிக்க தீவிரம் காட்டப்பட்டது. ஜூலை 9ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்தில் விகாஸ் துபே கைதுசெய்யப்பட்டார். பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து விகாஸ் துபேவை உத்தரப் பிரதேசத்திற்கு அழைத்து வரும் வழியில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தைப் பயன்படுத்தி விகாஸ் துபே தப்பிக்க முயன்றதாகக் கூறி, காவல் துறையினர் விகாஸ் துபேவை என்கவுன்ட்டர் செய்தனர். இந்த என்கவுன்ட்டரில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின. உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், விகாஸ் துபேவின் உடற்கூறாய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், விகாஸ் துபே இறப்பதற்கு முன்பே ரத்தக் கசிவு இருந்ததாகவும், அவரைத் துப்பாகியால் தாக்கிய காயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விகாஸ் துபேவின் உடற்கூறாய்வு அறிக்கை பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க:30 ஆண்டுகள்... 62 வழக்குகள்... யார் இந்த விகாஸ் துபே?