புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு புதுச்சேரி வருகிறார். இதையொட்டி பாதுகாப்பை பலப்படுத்தவும் மாநில அரசு சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
அன்றைய தினம் காலை 10 மணியளவில் தனி ஹெலிகாப்டரில் புதுச்சேரி விமான நிலையம் வரும் வெங்கையா நாயுடு அங்கிருந்து காரில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக சுமார் 10.20-க்கு பல்கலைக்கழகம் சென்றடைகிறார். பின்னர் விழாவை முடித்துவிட்டு அதே பாதையில் விமான நிலையம் திரும்புகிறார்.
குடியரசுத் துணைத் தலைவர் வந்து செல்லும் சாலைகளில் புனரமைப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும் கிழக்கு கடற்கரைச் சாலையில் தடுப்புக்கட்டைகள் அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. இது தவிர அரசின் பல்வேறு வரவேற்பு பதாகைகள் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுவருகின்றன.
இதனிடையே வெங்கையா நாயுடு வருகையால் புதுச்சேரி பல்கலைக்கழக வளாகம் முழுவதும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதையும் பார்க்க: ‘அருமையான வரவேற்புக்கு நன்றி’ - மோடியை பாராட்டிய ட்ரம்ப்