சீனாவுடனான எல்லைப் பதற்றம் நீடித்துவரும் நிலையில், நமது நாட்டு மக்களின் தகவல்களை சமூக வலைதளங்கள் மூலமாகவும், செயலிகள் மூலமாகவும் சீனா உளவு பார்க்கலாம் எனவும், அது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் கூறி டிக்டாக், யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. இதற்கு ஆதராகவும், எதிராகவும் பல கருத்துகள் வந்தபோதிலும், பலர் மாற்றுச் செயலிகளை உபயோகிக்க தொடங்கிவிட்டனர்.
130 கோடி இந்திய மக்களின் தனியுரிமைகளைப் பாதுகாக்க இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், இந்திய மக்களின் தகவல்களைப் பாதுகாக்க இந்தியாவிலேயே செயலிகளைத் தயாரிக்காதது ஏன் எனவும் பலரும் கேள்வி எழுப்பிவந்தனர்.
இந்நிலையில், தனிமனித உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட எலிமெண்ட்ஸ் (elyments) என்ற முதல் சமூக வலைதளச் செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த ஆயிரம் தொழிலாளர்கள் இணைந்து இந்தச் செயலியை உருவாக்கியுள்ளனர்.
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முன்னிலையில், இச்செயலியை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கிவைத்துள்ளார். கூகுள் ஃப்ளே ஸ்டோரிலும், ஆப் ஸ்டோரிலும் உலகம் முழுவதுமுள்ள மக்கள் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலியின் பாதுகாப்புத் தன்மை குறித்து ஆராய்வதற்காக மாதம் ஆயிரம் பயனாளர்கள் கொண்டு சோதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். இதுவரை இச்செயலியை இரண்டு லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகத் தெரிகிறது.
தனிமனித பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையிலும், நண்பர்கள், பின்தொடர்வதற்கு ஏதுவான அம்சங்களுடனும் இந்தச் செயலி அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர் வடிவமைப்பாளர்கள்.
எலிமெண்ட்ஸ் செயலியின் சிறப்பம்சங்கள்:
- வாய்ஸ் கால், வீடியோ கால்கள், குழுவினருடன் உரையாடும் அம்சங்களுடன் தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்திருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது
- செயலி ஒரு பக்கச் சார்பு தன்மையுடன் செயல்படாமல், அனைவரது கருத்துக்களுக்கும், சிந்தனைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது
- எட்டுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது
- இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களைச் சந்தைப்படுத்த ஏதுவான தளமாக இது அமையும்
- அந்தந்த பிராந்திய மொழிகளில் கட்டளைகள் தெரிவிக்கும்படி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது
- பணப் பரிமாற்றம் செய்யும் வசதியும் இச்செயலியில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
காணொலி மூலம் நடைபெற்ற இந்தச் செயலி அறிமுக விழாவில் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ், மாநிலங்களவை உறுப்பினர் அயோத்ய ராமி ரெட்டி, முன்னாள் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, மாநிலங்களவை உறுப்பினர் ஜோதிராத்திய சிந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.