மக்களவைத் தேர்தலில் 50 விழுக்காடு வாக்குகளை ஒப்புகைச் சீட்டு கருவிகளுடன் சரிபார்த்து தேர்தல் முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஐந்து வாக்குச்சாவடிகளை தேர்ந்தெடுத்து, அதிலுள்ள ஒப்புகைச் சீட்டு கருவியுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை சரிபார்த்து தேர்தல் முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து 21 கட்சிகள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், 50 விழுக்காடு வாக்குகளை ஒப்புகைச் சீட்டு கருவிகளுடன் சரிபார்த்து தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.