ஆந்திர மாநிலத்தின் கோயில் நகரமான திருப்பதிக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார். விசாகப்பட்டினத்தில் இருந்து இந்திய விமானப்படையின் விமானம் மூலமாக நேற்று காலை 11 மணியளவில் அவர் திருப்பதி வந்தடைந்தார்.
பின்னர் திருப்பதி அருகே உள்ள கண்டக்கியில் இருக்கும் தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி ஆய்வுக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்ற வெங்கய்யா நாயுடு நேற்று இரவு முழுவதிலும் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை தனது குடும்பத்தாருடன் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
அவரின் வருகையையொட்டி திருப்பதியில் பலத்த பாதுகப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாளை காலை வரை திருப்பதியில் தங்கும் வெங்கய்யா நாயுடு, நாளை காலை தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஹைதராபாத் திரும்பவுள்ளார்.
இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி ஜூன் ஒன்பதாம் தேதி திருப்பதியில் சாமி தரிசனம் செய்யவுள்ளதாக ஆந்திர மாநில பாஜக தலைவர் தெரிவித்திருந்தார்.
மக்களவைத் தேர்தலுக்கு பின் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மாநில முதலமைச்சர்களும், தேர்தலில் வெற்றிபெற்ற எம்.பி.க்களும் திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.