புதுச்சேரியில் 400-க்கும் மேற்பட்ட வாடகை வாகனங்கள் இயங்கிவருகின்றன. கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா தளர்வு வரும்வரை எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த மாதம் முதல் அனைத்து வாகனங்களும் இயக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் கடந்த 6 மாதத்திற்கான சாலை வரியைக் கட்ட போக்குவரத்துத் துறை சார்பில் அரசு வலியுறுத்தியது.
புதுச்சேரியில் கரோனா காலங்களில் இயங்காத அனைத்து வாடகை வாகனங்களுக்கான சாலை வரியை ரத்துசெய்ய வலியுறுத்தி அரசுக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் கடந்த வாரம் இதற்கான போராட்டங்கள் நடைபெற்றது.
ஆனால், இதுவரை அரசு சாலை வரியை ரத்துசெய்யவில்லை என வாடகை வாகன உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்த நிலையில் நூறு அடி சாலையில் அமைந்துள்ள ஆர்டிஓ அலுவலகம் முன்பு உள்ள மேம்பாலத்தில் இருபுறங்களிலும் 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள், வேன்கள், கார்களை நிறுத்தி உடனடியாக சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
அந்தப் பகுதி முழுவதும் இந்தப் போராட்டத்தின் காரணமாக இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்தை போக்குவரத்து காவல் துறையினர், காவலர்கள் சரிசெய்தனர்.
இதனைத் தொடர்ந்து வாடகை வாகன உரிமையாளர்கள், வட்ட போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.