கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வரக்கூடாது என்றும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவு மீறி வெளியே செல்கின்றனர்.
இந்நிலையில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த காரைக்கால் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அத்தியாவசிய பொருள்களைத் தவிர்த்து, தேவையின்றி இருசக்கர வாகனங்களில் செல்பவர்களைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீரவல்லபன் உத்தரவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து நகர போக்குவரத்து காவல் துறையினர் இருசக்கர வாகனங்களை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இன்று அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்களில், 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் பிடிபட்டன. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அங்குவந்து குவிந்ததால் காரைக்கால், போக்குவரத்து காவல் நிலையத்தில் கூட்டம் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை சமூக இடைவெளி விட்டு நிற்குமாறு வலியுறுத்தினர்.
மேலும் அத்தியாவசிய பொருள்கள் வாங்க வந்ததாகப் பொய் சொல்லி, சாலைகளில் தேவையில்லாமல் ஊர் சுற்றியவர்கள் 200க்கும் மேற்பட்டவர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: கரோனாவை விரட்ட பாடல் எழுதிய கானா பாலா!