புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனான மன்னர் மன்னன் என்கிற கோபதி நேற்று வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். புதுச்சேரி பெருமாள் கோயில் வீதியிலுள்ள பாவேந்தர் பாரதிதாசனின் நினைவிடத்தில் அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
இவரது இறுதிச்சடங்கில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "தனது 92ஆவது வயதில் உயிரிழந்த பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவருடைய இழப்பு தமிழன்னைக்கு பேரிழப்பு. அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் ஏராளம். அவருடைய குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.