பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கின் விசாரணைக்காக வர்ஷா ராவத் அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் ஜனவரி 5ஆம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இவர், சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத்தின் மனைவி ஆவார். ஆனால், அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் இன்று அவர் திடீரென ஆஜராகியுள்ளார்.
சஞ்சய் ராவத்திற்கு நெருக்கமான பிரவீன் ராவத்திற்கு, பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி 95 கோடி ரூபாய் கடன் வழங்க அனுமதி வழங்கியிருந்தது. கிட்டத்தட்ட 1.6 லட்சம் ரூபாயை தனது மனைவி மாதுரி ராவத்தின் வங்கி கணக்கிற்கு பிரவீன் ராவத் மாற்றியுள்ளார். மொத்த தொகையில், 55 லட்சம் ரூபாய் வர்ஷா ராவத்திற்கு வட்டியில்லா கடனாக இரண்டு கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 2010ஆம் ஆண்டு, 50 லட்சம் ரூபாயும் 2011ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாயும் மாதுரியின் வங்கி கணக்கிலிருந்து வர்ஷாவுக்கு மாற்றப்பட்டது தெரியவந்தது. அந்த தொகையை பயன்படுத்தி தாதர் கிழக்கில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வர்ஷாவிடம் அமலாக்கத்துறை விசாரணை செய்துவருகிறது.
ஆஜராக ஜனவரி 5ஆம் தேதி வரை, வர்ஷா அனுமதி கோரியிருந்தார். இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறுகையில், "எங்களுக்கு யாரையும் கண்டு அச்சமில்லை. அனைத்திற்கும் ஏற்றார்போல் பதிலளிப்போம். வீட்டு பெண்களைஇம்மாதிரியாக தாக்குவது கோழைத்தனமான செயல்" என்றார்.
முன்னதாக இரண்டு முறை ஹர்ஷாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், உடல்நிலையை காரணம்காட்டி அவர் ஆஜராக மறுப்பு தெரிவித்துவிட்டார். கடந்தாண்டு செப்டம்பர் மாதம், பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் 4,355 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பதாகக் கூறி அதன் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்திருந்தது.