எல்கர் பரிஷத் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ், ராய்காட் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை, மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், மாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நீதிபதிகள் எஸ்.எஸ். சிண்டே, மாதவ் ஜாம்தார் ஆகியோர் அடங்கிய அமர்வு, அவருக்கு சிகிச்சை தேவை எனத் தெரிவித்திருந்தது. இதற்கு, மாநில அரசு மறுப்பு தெரிவிக்க முடியுமா? தலோஜா சிறையிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கிறோம் எனச் சொல்ல போகிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இரண்டு வாரங்களுக்கு நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவு பிறப்பிக்கிறோம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிமன்றத்திடம் தெரிவிக்காமல் அவரை மருத்துவமனையிலிருந்து விடுவிக்கக் கூடாது மேலும், அவரை குடும்பத்தினர் சந்திக்க அனுமதி வழங்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். பின்னர், வழக்கின் விசாரணை டிசம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
2017 டிசம்பர் 31ஆம் தேதி, எல்கர் பரிஷத் அமைப்பு சார்பாக ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அந்தக் கருத்தரங்கில், வன்முறையைத் தூண்டும்விதமாக பேசியதாக வரவர ராவ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். பீமா கோரேகான் பகுதியில் நடைபெற்ற வன்முறைக்குக் காரணம் இவர்களின் பேச்சுதான் எனவும், காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டது.