கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தம் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கடந்த மார்ச் 25ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் நான்காவது முறையாக மே 31ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டன.
ஊரடங்கின் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மே 25ஆம் தேதி முதல் பல கட்டுபாடுகளுடன் உள்நாட்டு விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இருந்தபோதிலும், சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லாததால். வெளிநாடுகளில் சிக்கிதவிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர்.
இதனை கருத்தில்கொண்டு, ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப ஏதுவாக மத்திய அரசு மே 7ஆம் தேதி வந்தே பாரத் திட்டம் செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பிவுள்ளதாகவும், வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " ஊரடங்கின் காரணமாக தோஹா, சான் பிரான்சிஸ்கோ, மெல்போர்ன், சிட்னி ஆகிய நகரங்களில் சிக்கி தவித்து வந்த 833 இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் டெல்லி, கயா, கொச்சி, அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு மே 25ஆம் தேதி வந்தடைந்தனர்" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், வந்தே பாரத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மீட்பு பணி ஜுன் 13ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய வெளியுறவுத் துறை செய்திதொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது, "47 நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் , 162 விமானங்கள் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்". மேலும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்கு அனுமதி பெற்ற ராய்ப்பூர் எய்ம்ஸ்!