மக்களவைத் தேர்தலில் வைகோ தலைமையிலான மதிமுக திமுகவுடன் கூட்டணி வைத்தது. கூட்டணி வைக்கும்போது மதிமுக கட்சிக்கு ஒரு மக்களவைத் தொகுதியையும் ஒரு மாநிலங்களவை சீட்டையும் ஒதுக்குவதாக திமுக உறுதியளித்திருந்தது.
அதன்படி மாநிலங்களவையில் உறுப்பினர் ஆவதற்கான தேர்தலில் வைகோ இன்று போட்டியிட்டு வெற்றிபெற்றார். வெற்றிச் சான்றிதழை வாங்கிவிட்டு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "வெற்றிச் சான்றிதழை எடுத்துக்கொண்டு அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடம் சென்று புகழஞ்சலி செலுத்த உள்ளோம். தமிழ் இனத்தை, தமிழ்நாடு வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் ஜனநாயகத்திற்குப் பேராபத்தாக உருவாகி வரும் இந்துத்துவா சக்திகளின் படையெடுப்பை முறியடிப்பேன். கூட்டாட்சித் தத்துவத்தை வெற்றி பெறச் செய்யவும் தமிழ்நாட்டில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய அனைத்து நன்மைகளையும் பெறும் வகையில் அண்ணாவின் குரல் ஒலித்த அவையில் அண்ணாவின் கொள்கைகளை லட்சிய கனவை எடுத்துச் செல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வேன்." என்றார்.