அந்த அறிக்கையில், “ஐநா சபையில் அலுவல் மொழியாக இந்தியைக் கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறது. அண்மையில் ஐ.நா.வின் ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களும் இந்தி மொழியில் சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது”, என்று மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் கூறினார். பாஜக அரசின் ‘இந்தி மொழி’ வளர்ச்சித் திட்டங்கள், திணிப்புகள் தொடரும் நிலையில் இந்தி தவிர பிற மொழி பேசும் மக்களின் வேலை வாய்ப்புகளையும் தட்டிப் பறிப்பதில் குறியாக உள்ளது.
அதன் ஒரு பகுதியாக இந்திய அஞ்சல்துறை நடத்தும் தேர்வுகள் அந்தந்த மாநில மொழிகளிலேயே நடைபெற்று வந்த நிலையில் இனி வினாத்தாள்கள் இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த அஞ்சலகப் பணியாளர்கள் தேர்வில் அரியானா, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தோர் அதிக மதிப்பெண்கள் பெற்றதாகக் கூறி தமிழ்நாட்டில் அஞ்சல்துறையில் பணி வாய்ப்பு பெற்றனர்.
இந்நிலையில் தமிழை நீக்கி விட்டால் தமிழ்நாட்டில் குக்கிராமங்களில் உள்ள அஞ்சலகங்களில் கூட இனி ‘இந்தி மொழி பேசுவோரை’ப் பணி அமர்த்தும் திட்டம் தடையின்றி நடக்கும். மொழிப் பிரச்சினையால் அஞ்சல் சேவை மற்றும் தகவல் தொடர்புகளும் பெரிதும் பாதிக்கப்படும். அஞ்சலகப் பணியாளர்கள் தேர்வுகளில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே வினாத்தாள் இருக்கும் என்பதை மாற்றி, தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் வினாத்தாள் இடம்பெறச் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.