ஒடிசா மாநிலம் பிபி.நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வசித்துவரும் சிறுமி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒரு ஆண்டிற்கு மேலாகியும், காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சிறுமி மிகவும் மனதளவில் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (ஜூலை 10) வீட்டிலுள்ள அனைவரும் வெளியே சென்றிருந்த தருணத்தில், சிறுமி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து பேசிய காவல் துறைக் கண்காணிப்பாளர், 'சிறுமி அவருடைய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரால் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவர், சிறுமி வசித்துவரும் அதே கிராமத்தில் வசித்து வருகிறார். சிறுமியின் குடும்பத்தினர் வழக்கில் சமரசம் செய்யவே விரும்புகின்றனர்.
நாங்கள் குற்றவாளியின் மேல் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ளோம். ஆனால், அவர் உயர் நீதிமன்றத்தில் பிணை வாங்கியுள்ளதால், மேற்படி எவ்வித நடவடிக்கையும் தங்களால் எடுக்கமுடியவில்லை. மேலும் குற்றவாளி மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளோம்'' என்றார்.
தற்கொலை எண்ணம் உங்களுக்கு மேலோங்கினால், அதிலிருந்து வெளிவரவும், புதியதொரு வாழ்க்கையினை தொடங்கிடவும், உங்களுக்கான ஆலோசனைகளை எந்த நேரத்திலும் வழங்கிட அரசும், சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் காத்திருக்கின்றன.
உதவிக்கு அழையுங்கள்:
அரசு உதவி மையம் எண் - 104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம் - +91 44 2464 0050, +91 44 2464 0060